பூர்வீக
பழக்கம் காத்து, ஆரோக்யம் பேண வாரீர்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு - அருந்தியது
அற்றது போற்றி உணின்”.
என்றுரைத்த திருவள்ளுவர் இன்றிருந்தால்
கீழ்கண்டபடி
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு - அருந்துவது
யாதென பார்த்துணர்ந்து உணின்”.
என்றே நமக்கு இடித்துரைத்திருப்பார்
ஆம். ஏன் என்றால் இன்று நாம் உண்ணும்
உணவில் சத்து இருக்கிறதோ இல்லையோ, பாதுகாப்பான் (PRESERVATIVE) தான் அனைத்து உணவுகளிலும் இடம்
பெற்றிருக்கிறது. நாம் ஒரு பொருளை சாப்பிடுவதால் அதில் உள்ள சத்து நம் உடலுக்கு
சத்தை தந்தால்தான், நாம் ஆரோக்யமாக வாழ இயலும். அதை விடுத்து அந்த பொருளில்
இருக்கும் சத்தை வீணாக்கியாகிலும் நீண்ட காலம் வைத்திருப்பதால் என்ன பயன்? சற்று
சிந்தித்து பாருங்கள்.
அன்று அவரைக்காயோ, மாங்காயோ, மீனோ, மிகுந்து
கிடைக்கும் காலங்களில் மட்டும் அதனை மெனக்கட்டு உப்பு, மோர் போன்றவற்றை போட்டு பதப்படுத்தி
காய்கறிகள் கிடைக்காத காலங்களில் பயன்படுத்தி வந்தனர்.
இன்று நமது சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடாக
மஞ்சள் தூளைக்கூட யாராவது பெரிய கம்பெனிகள் பாக்கெட் செய்து தரமாட்டார்களா? என்று
ஏங்கி கிடக்கிறோம். நீண்ட நாள் கெடாது இருக்க இரசாயனத்தை நாட ஆரம்பித்துவிட்டோம். அதன்
மூலம் நாம் கொடுக்கும் விலைதான் நம் விலை மதிப்பில்லா ஆரோக்யம். இது சரியா? சற்று சிந்தித்து
பாருங்கள்.
அன்று எனது தாயார் – லெ. சியாமளாதேவி டாக்டர்
கு. லெக்ஷ்மணன் RIMP
அவர்களின் பாரியாள் (மனைவி) அவர்கள், அடுப்பு பத்தவைக்க எத்தனித்ததும் முதலில்
தீப்பெட்டியை எடுத்து காவிளக்கை (கெரோசின் விளக்கு) ஏற்றுவார்கள். ஏற்றிய உடன்
தீப்பெட்டி உபயோகித்த கையை சுத்தமாக கழுவிவிட்டு பின்னரே அடுப்பை பத்தவைப்பார்கள்.
இன்றைய தலைமுறையினருக்கு இது வேடிக்கையாகத்தான் இருக்கும்.
தீப்பெட்டியில் இருக்கும் கெமிக்கல்கள்
கைவழியே நமக்காக உணவு தயாரிக்கும்போது அதில் கலந்து நம் உடலை பாதிக்கும்
என்றுணர்ந்து இருந்தார்கள். ஒரு நாளைக்கு 0.001 சதவிகிதம் என்கிற அளவுதான் என்றாலும்,
சிறு துளி பெரு வெள்ளம் என்பதற்கிணங்க அந்த தீப்பெட்டியின் நச்சு நம்மை பாதிக்க
கூடாது என்கிற பொறுப்பு அவர்களிடம் இருந்தது.
இன்று எந்த விஷமாக இருந்தாலும் அது எதில்
இருந்தாலும் என்ன? மெனக்கட்டு யாராவது செய்து வாயில் வந்து ஊட்டினால் சரி என்ற
நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டோம். மொறுமொறுப்பு குறையாதிருக்க பிஸ்கட்களில்
வேதிப்பொருள்கள் கலந்திருந்தாலும், குளிர்பானங்கள் கெட்டுப்போகாதிருக்க குளிர் பானங்களில்
வேதிப் பொருட்கள் கலந்திருந்தாலும், டின்னில் அடைக்கப்பட்ட பழம், மீன்
போன்றவற்றில் வேதிப்பொருட்கள் கலந்திருந்தாலும், அன்றாடம் உபயோகிக்கும்
எண்ணெய்யில் நச்சுப் பொருள் கலந்திருந்தாலும் நமக்கு எந்த கவலையும் இல்லை. ( நம்
உடல் கெட்டாலும் பரவாயில்லை ) காய்கறிகளையே நறுக்கி கொடுத்தால் வாங்கும் அளவுக்கு
முன்னேறிவிட்டோமே. இது சரியா? சற்று சிந்தித்து பாருங்கள்.
அன்று எனது பெரியம்மா - டாக்டர் கு.
தெய்வநாயகம் RIMP
அவர்களின் பாரியாள் (மனைவி) ஜென்பகத்தம்மாள் அவர்கள், மழை காலம் போய் வெய்யில் காலம் வரும் முன் மழைக்கு
பிடிக்கும் குடையை அவர்கள் நன்றாக வெய்யலில் காயவைத்து நாப்தலின் உருண்டை போட்டு
ஓர் பழைய துணியில் சுற்றி சணல் கொண்டு கட்டி பத்திரப்படுத்தி வைப்பார்கள். ஒரு
குடையை சுமார் 20 ஆண்டுகள் பத்திரப் படுத்தினார்கள். இன்னும் சொல்லப்போனால் அந்த
கால குடையில் நடுவில் கம்பி இருக்காது, பிரம்புதான்.
இன்று எந்த ஒரு பொருளையும் நம்மால்
எவ்வளவுகாலம் வைத்திருக்க முடிகிறது? சற்று சிந்தித்து பாருங்கள்.
அன்று நாம் உபயோகிக்கும் பாத்திரங்களை புளி
மற்றும் சாம்பல் போட்டு தேய்த்து பின்னர் சுத்தமாக கழுவி, துடைத்து, வெய்யலில்
காயவைத்து கவிழ்த்து வைத்தோம், நல்ல ஆரோக்யமாகவே வாழ்ந்தோம்.
இன்று எந்த சோப், எந்த லிக்யூடு, அல்லது எந்த
பவுடர் பாத்திரம் துலக்க எளிமையாக இருக்கிறது? என்று டி.வி சேனல் விளம்பரத்தை
பார்த்து வாங்கிவிடுகிறோம், அதில் என்ன இரசாயன பொருள் கலந்து இருக்கிறது என்று
யோசிக்காமலே. பாத்திரம் தேய்த்து, பீளி (WATER TAP) க்கு அடியில் நீரில் பிடித்து காட்டி சுத்தமாகிவிட்டதாக நாமாக
கருதிக்கொண்டு அதில் உணவு சமைத்து சாப்பிடுகிறோம், பாத்திரத்தின் மீது
படர்ந்திருக்கும் அந்த கெமிக்கல் படலம் நம் உடலுக்குள் சென்று ஊறு விளைவிக்கப்
போவது அறியாது. உபயோகிக்கிறோம். இது சரியா? சற்று சிந்தித்து பாருங்கள்.
அன்று வாரா வாரம் எண்ணெய் தேய்த்து தலை
முழுகி, நிதம் தலைக்கு எண்ணெய் வைத்து அடர் கூந்தலுடன் வலம் வந்த நாம்.
இன்று விளம்பரத்தில் வரும் பெண்ணை பார்த்து,
பெண்ணின் அலகாம்பரத்தை (முடியை) பார்த்து, இந்த ஷாம்புவால் தான் இவ்வளவு முடி
வளர்ந்தது என்று இருக்கும் முடியை தொலைத்தவர் ஏராளம். விளம்பரத்தில் பார்த்த பெண் வாரா
வாரம் எண்ணை தேய்த்து குளித்து வருபவரோ அல்லது இயல்பிலேயே முடி அடர்த்தியாக
இருப்போராக இருக்கலாம். கண்டிப்பாக இந்த பொருளை உபயோகித்ததால் இருக்காது என்பதை
உணர்கிறோமா? இல்லை. சற்று சிந்தித்து பாருங்கள்.
அன்று பாரம்பரிய பழக்கம் என்று எண்ணற்ற
பழக்கங்களை நம் தாத்தா, பாட்டி, மாமன், மச்சான்ககள், மற்றும் குடும்ப நண்பர்கள்
போன்று நம் நலனில் அக்கரை கொண்டோர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு ஏன் அறிவுறுத்தப்பட்டு
அப்பொருட்களை உபயோகித்து காலம் காலமாக ஆரோக்யமாகவே வாழ்ந்துவந்தோம்.
இன்று டிவி விளம்பரத்தில் கூறுவதை (செய் வினையை)
மெய் என்று நம்பி அவர்கள் நம் நலனில் அக்கரை கொண்டோர் போல கூறுவதை நம்பி (அவர்கள்
யார் நம் நலனில் அக்கரை கொள்ள? என்பதறியாது) ஆரோக்யத்தை அன்றோ அடகு வைக்கிறோம். இது
சரிதானா? சற்று சிந்தித்து பாருங்கள்.
நமது ஆரோக்யத்தை முன்னிறுத்தி அனைவரும்
சிந்தித்து பார்த்து, களி, முருக்கு. சீடை, அதிரசம், அடை, அவியல் என்று நமது
பாரம்பரிய உணவுகளை கஷ்டப்பட்டு செய்து, இஷ்டப்பட்டு சாப்பிட்டு ஆரோக்யம் பேண
அன்புடன் அழைக்கிறேன். வாரீர்.
No comments:
Post a Comment